இறைவனின் அவதாரங்களும் திருவிளையாடல்களும் ஆச்சர்யமும், அற்புதமும் கொண்டவை மட்டுமல்ல; ஆயிரமாயிரம் அர்த்தங் களை உள்ளடக்கியவைகள்.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஆலயமும், வழிபாட்டுத் தலங்களும் ஒவ்வொரு வகையான வரலாறுகள், ஐதீக மரபுகளைக் கொண்ட ஷேத்திரங்கள் தான்.
அப்படிப்பட்டதொரு சிறப்புகளையும் ஆதிபகவன் விஸ்வசொரூபமாய் அவதார மெடுத்த பூமிதான் சங்கரன்கோவில் என்றழைக்கப்படும் சங்கரநாராயணர் கோமதி அம்பிகையின் ஆலயம். தற்போது தென்காசி மாவட்டத்தில் அடங்கிய நகரம். அருவமும் உருவமுமாய் நிற்கும். ஆதிபகவானின் பெயரால் அமையப்பெற்ற ஆன்மிகத் தலம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sankarankovil_0.jpg)
இந்த மண்ணில்தான் ஆதிசிவனே, "அனைவரும் அனைத்தும் ஒன்றே; யாம் அதன் அங்கம்' என்று உலகிற்கு உணர்த்தி ஒற்றுமைப் படுத்திய தலம். மேலும் சர்வ மகாசக்தி தவமிருந்த பூமி. இறைவன் அவதாரமெடுத்த அந்த அற்புத மான நிகழ்வு மெய்சிலிர்க்க வைக்கும்.
வெகுகாலத்திற்கு முன்பிருந்தே சைவம் பெரிதா- வைணம் பெரிதா என்ற ஆணவ மனப்பான்மை இருந்து வந்தது. இரு சமயப் பற்றாளர்களும் தங்களுக்குள்ளேயே யார் பெரியவர் என்று மோதிக்கொண்டார்கள். மூர்க்கத்தனமான மோதலிலும் ஈடுபட்ட னர். இதனால் பூலோக அமைதிக்கு பங்கமேற்பட்டது கண்டு, தேவாதி தேவர்கள், பக்தர்களின் இந்த மோதல் களை சர்வேஸ்வரனிடம் கொண்டு சென்றவர்கள். அவர்களின் வேண்டுதல் கண்டு மனமிறங்கினார் சர்வேஸ்வரன். பிரபஞ்சத்தின் அமைதி காப்பதற்காக சிவபொருமான் தன் உடலின் இடது பாகத்தில் விஷ்ணுவாகவும், வலது பாதத்தில் புலித்தோல் அணிந்த சிவனாகவும் ஓருருவாய் அமைந்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆயிரம் மின்னல்கள் வெட்ட விஸ்வரூபமாய் நின்றார். சிவபெருமானைக் கண்டு மோதிக் கொண்ட பக்தர்கள் பதை பதைப்பாய் நின்றனர். அரியும் சிவனும் வேறு வேறல்ல. ஒருவரேதான்; சைவமும் வைணமும் அதேபோன்றுதான் என, சங்கர நாராயணராக சர்வேஸ்வரன் மலர்ந்தது கண்டு மெய்சிலிர்த்த பக்தர்கள், தங்களுக்கு வெடித்த பிணக்குகளை அக்கணமே மறந்து ஒன்றானார்கள்; பூலோகம் அமைதிப் பூங்கா வானது என்கிறார்கள் ஆன்மிகப் பற்றாளர் கள். சங்கர நாராயணராக (அரியும் சிவனு மாய்) பக்தர்களுக்கு பகவான் அருளிய அத்தி ருக் காட்சியினைத் தானும் காண்கிற பாக்கி யம் வேண்டுமென்று அன்னை பார்வதி தேவி யார் சர்வேஸ்வரனிடம் கோரிக்கை வைத்தார்.
"தேவி. பூலோகத்தில் புன்னைவனப் பகுதியில் எம்மை நோக்கித் தவமிருந்தால், அக்காட்சியினைக் காணும் பேறு கிட்டும்'' என்று எம்பிரான் அருளாசி வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sankarankovil1.jpg)
சிவபொருமானின் ஆக்ஞைப்படி பூலோகத்தின் பொதிகையடிப் புன்னைவனத் தில் ஆயிரம் "கோ'க்களுடன் (பசுக்கள் சூழ) ஆதிசிவனை நோக்கிக் கல்ப கோடி காலம் ஒற்றைக் காலில் கடும்தவம் மேற்கொண் டாள் பார்வதி தேவியார். அம்பிகையின் தவத்தை மெச்சி, சிவபெருமான், சங்கர நாராயண ராக விஸ்வரூபத்தில் அம்பிகைக்குக் காட்சி யளித்தார்.
ஆடித்திங்கள் உத்திராட பௌர்ணமி, சுபயோக தினத்தின்போது சிவபெருமான் சங்கர நாராயணராக அன்னைக்கு அளித்த இத்திருக்காட்சியே ஆடித்தபசு என்றாகி புகழப்பட்டது.
இத்தகைய சிறப்புவாய்ந்த இத்தலத்தில் கி.பி. 11ம் நூற்றாண்டில் உக்கிரன் கோட்டையை ஆண்ட உக்கிரபாண்டிய மன்னன் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சங்கர நாராயணர், சங்கரலிங்கப் பெருமான், தவக்காட்சியாய் நிற்கிற அன்னை கோமதியம்பிகை மூவருக்கும் தனித்தனி சந்நிதியைக் கொண்ட மிகப் பெரிய ஆலயத்தைக் கட்டியமைத்தார்.
மூன்று மிகப்பெரிய சந்நிதிகளைக் கொண்ட சங்கரநாராயணர் கோவில் தான் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயமாகக் கருதப்படுகிறது.
அத்தலத்தில்தான் அன்மை கோமதியம் பிகைக்கு, சிவபெருமானே அருளிய ஆடித் தபசுக் காட்சி வைபவம் நடந்தேறியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sankarankovil2.jpg)
ஆடி மாதம் அந்த அருந்தவ வைபோகம் நடந்ததால் ஆடிமாதம் முழுக்க சங்கரன் கோவில், நகரமும், ஆலயமும் விழாவினால் அமர்க் களப்படும். காலம் காலமாக கடைப்பிடிக்கப்படுகிற வழக்கப்படி நகரின் ஒவ்வொரு மண்டகப்படிக்கும் அந்த மண்டகப்படிதார மக்களால், சங்கர நாராயணரும் கோமதியம்பிகையும் அலங்காரத் தோடு அழைத்து வரப்பட்டு, மண்டகப் படியில் சிறப்புப் பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், தீபாராதனைகள் நடத்தப்படும், சிறப்பு வெள்ளி யலங்கார சப்பர வாகனத்தில் வீதியுலா நடக்கிறபோது, பக்தர்கள் திரண்டு வந்து தரிசிப்பர்.
அத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவில் ஆலயத்தில் இந்த வருடம், ஜூலை 11-ஆம் தேதியன்று கொடியேற்றத் துடன் தொடங்கியது. அன்றைய தினம் முதல் 12 நாட்களும் நடைபெற்ற விழாவின்போது அன்னை கோமதியம்பிகை ரிஷபவாகனம், வெள்ளி காமதேனு வாகனம் போன்ற பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். மண்டகப் படிகளுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக- அலங்கார- தீபராதனைகளும் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நாளான ஆடித்தபசு காட்சியின் ஜூலை 21 அன்று நகரம் விழாக் கோலத் தில் அமர்க்களப்பட்டது. அன்னையின் அருந் தபசுக் காட்சியைக் காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர். அன்றைய தினம் மாலையில் சங்கரன்கோவில் நகரம் மக்கள் தலைகளால் கடலானது. அதிகாலை சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை 4.29 மணிக்கு சங்கரநாராயணர் திருக்கோலத்தில் தங்கச் சப்பரத்தில் கோவிலிலிருந்து புறப்பட்டார்.
மாலை 6.58 மணிக்கு தபசு மண்டபத்தில் தவமிருக்கிற கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகக் காட்சியளித்தார். அவரை அன்னை கோமதியம்பாள் மூன்றுமுறை வலம் வந்தார். அப்போது கடலென திரண்டி ருந்த பக்தர்கள் பரவசத்தோடு பக்தி கோஷமிட்டனர். அதுசமயம் விவசாயி கள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை காட்சி சப்பரத்தின்மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்படிச் செய்தால் விவசாயம் பெருகும், செழிக்கும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு. அதே போல திருக்காட்சியின்போது மக்கள் தங்கள் கோரிக்கையை நேர்த்திக்கடனை செலுத்தி, மனமுருக வேண்டினால் நிறைவேறும் என்பதும் ஐதீகம். இதையடுத்து இரவு 12.05 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சுவாமி, சங்கரலிங்க சுவாமியாகக் காட்சிதந்தார்.
ஆலயத்தின் கோவிலின் நுழைவு வாயிலில் வடப்புறம் அமைந்துள்ள நாகசுனை தெப்பக்குளம் பாம்பரசர் களான சங்கனும் பதுமனும் ஏற்படுத்தி யது. இதனால் நாகதோஷத்திற்கான பரிகாரத் தலம் இது என்பது குறிப்பிடத் தக்க ஒன்று. அன்னைக்கு தோற்றம் வேறாயினும் இறைவன் ஒன்றே என்னும் உயரிய தத்துவத்தை என்றென் றும் மக்களுக்கு விளக்கும் தலமாகத் திகழ்கிறது சங்கரன்கோவில்!
அந்த மண்ணிற்கு அமானுஷ்யமான தெய்வ சக்தி உள்ளது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே சங்கரன் கோவிலின் இன்னொரு பக்கம் என்பது வெளிவராத ரகசியம்.
படங்கள்: ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/sankarankovil-t.jpg)